ஞானவாபி மசூதி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மசூதி நிர்வாகம் தரப்பில் தொடரபட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இது இந்துக் கோவில் என்றும், 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசர் ஒளரங்கசீப்பால் இடித்துவிட்டு, மசூதி கட்டப்பட்டது என்றும் இந்துக்கள் நீண்ட காலமாகவே கூறிவருகின்றனர். இதுகுறித்து 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதையடுத்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த வழக்கை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரித்து வந்த நிலையில், வேறு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவில் தலையிட முடியாது. உயர் நீதிமன்றங்கள், ஒரு நிலையான செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இது நிச்சயம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று கூறி, மசூதி நிர்வாகக் குழுவின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
இதனிடையே, இது தொடர்பான வழக்கில் நவம்பர் 6-ம் தேதிக்குள் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில், ஆய்வை நிறைவு செய்து விட்டதாக வாரணாசி நீதிமன்றத்தில் தெரிவித்த தொல்லியல் துறை, அறிக்கையை சமர்ப்பிக்க நவம்பர் 17-ம் தேதி வரை அவகாசம் கேட்டிருந்தது. இதற்கு வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
அதேபோல, மசூதியின் அடித்தளப் பகுதியின் நுழைவு வாயில் சாவியை வாரணாசி மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மசூதியின் நிர்வாகக் குழு நவம்பர் 6-க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.