சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் விடியவிடிய கனமழை பெய்தது. சென்னையில் குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அசோக்பில்லர், கோயம்பேடு, போரூர், தி.நகர், வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று, சென்னை புறநகர்ப் பகுதிகளான மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்த மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோயம்பேடு மெட்ரோ பாலத்தின் கீழ் முழங்கால் அளவு நீர் தேங்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் செல்லக்கூடிய பிரதான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும், சென்னை எழும்பூர் லங்ஸ் கார்டன் சாலை, இராயப்பேட்டை ஜிபி சாலை பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.