திமுக ஆட்சி பதவியேற்றது முதல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாகவும், சாதி ரீதியிலான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் தென்மாவட்டத்தில் மிகப்பெரிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
அதாவது, நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதிக்குப் பட்டியலின சிறுவர்கள் சிலர் குளிக்கச் சென்ற போது, அவர்களைச் சுற்றி வளைத்து மிரட்டியுள்ளது 6 பேர் கொண்ட கஞ்சா கும்பல். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர் சிறுவர்கள்.
ஆனால், சிறுவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் சாதிப் பெயரைக் கேட்டுத் திட்டிவிட்டு, அவர்கள் மீது சிறுநீர் கழித்தும், அவர்களிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டும் அடித்து விரட்டியுள்ளது அந்த கும்பல்.
இது தொடர்பாகத் தகவல் வேகமாகப் பரவ, சாதி பிரச்சனை வெடித்துவிடும் எனப் பயந்த காவல்துறை, களத்தில் குதித்தது. கஞ்சா பார்ட்டிகள் 6 பேரை அள்ளிக் கொண்டு வந்தது. அவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்கள் மீது குண்டாஸ் பாயும் என தெரிகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அரசில் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சென்று, மீடியாவுக்கு பேட்டி எல்லாம் தரக்கூடாது, அப்போதுதான் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம் என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
“நிதி”யைவிட “நீதி” தான் முக்கியம் என்பது பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உள்ளது.