திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக பாளையங்கோட்டையில் 38 மில்லி மீட்டரும், நெல்லையில் 30.6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. மேலும், சேர்வலாறு, சேரன்மகாதேவி, இராதாபுரம், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு, நம்பியாறு பகுதி, கொடுமுடியாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கிக் காணப்பட்டது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 45.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மேலும் திருச்செந்தூர், கடம்பூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், காடல்குடி, வைப்பாறு, காயல்பட்டினம், விளாத்திகுளம், சூரன்குடி, வேடநத்தம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி பகுதியில் 37 மில்லி மீட்டரும், கடனா நதியில் 18 மில்லி மீட்டரும் மழையும் பதிவாகி உள்ளது. மேலும், செங்கோட்டை, ஆய்குடி, குண்டாறு, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம், நேற்று 98.20 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும் ஒரு அடி உயர்ந்து 99.28 அடியாக இருந்தது.
பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 87.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 924.063 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் கடனாநதி,ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டமும் இன்று தலா ஒரு அடி உயர்ந்தது. தொடர்ந்து, மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.