குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் “அமைதியான உரையாடல்: அழிவின் விளிம்பில் இருந்து மையத்திற்குக் கொண்டு வருதல்” என்ற தலைப்பிலான கலைப்பொருட்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சூழலியல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் சங்கலா அறக்கட்டளையுடன் இணைந்து இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது, “உலகில் உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில், 70 சதவீதம் இந்தியாவில் காணப்படுகிறது. புலிகள் காப்பகங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி வாழும் மக்கள், புலிகள் அதிகரிப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளனர். புலிகள் காப்பகப் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான உறவைக் கலைப் பொருட்கள் மூலம் இந்தக் கண்காட்சி வெளிப்படுத்துகிறது.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, முழுமையான மற்றும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் மனிதக் குலத்தின் நன்மைக்காகவும், பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை விழுமியங்களை நாம் பின்பற்ற வேண்டும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியம் என்பது குறித்து அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.
மேலும், கட்டுப்பாடற்ற பொருள்நிலை கொள்கை, மோசமான வணிக நடைமுறைகள் மற்றும் பேராசை ஆகியவை துன்பத்தையும் கலக்கத்தையும் கொண்ட ஒரு பூமியை நமக்கு விட்டுச் சென்றுள்ளன. உணவு மற்றும் நீர்ப் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பருவநிலை மாற்றம் எழுப்பியுள்ளது. பாரம்பரிய மற்றும் நவீன சிந்தனை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் நமது பாதுகாப்பு மற்றும் ஆபத்துத் தணிப்பு உத்திகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். உள்நாட்டு அறிவாற்றலைப் பாதுகாத்து, மேம்படுத்தி, பயன்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் உள்ள மக்கள், சமூகத்தில் அவர்களின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்தை இழக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறினார்.