மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மஹாத் எம்.ஐ.டி.சி. பகுதியில் புளூ ஜெட் ஹெல்த்கேர் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை 10.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதன் காரணமாக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் கொண்ட பீப்பாய்கள் வெடித்துச் சிதறின. இச்சம்பவத்தின்போது தொழிற்சாலைக்குள் ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர்.
இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், 11 பேரைக் காணவில்லை. இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் விரைந்து வந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், வளாகத்திற்குள் இருந்த ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்கள் கொளுந்து விட்டு எரிந்ததால், தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது.
தீயணைப்புப் படையின் 10 வாகனங்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தன. இதன் பிறகு பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்றது. அப்போது, தொடர்ச்சியாக 7 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 4 பேரின் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.