இத்தாலி நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இத்தாலி சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு துணை பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானியை சந்தித்து பேசினார். அப்போது விண்வெளி, பாதுகாப்பு, வேளாண் தொழில்நுட்பம், உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரைத் தொடா்ந்து மேற்காசிய சூழல், ரஷியா-உக்ரைன் போா், இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா, இத்தாலி மாணவா்கள் மற்றும் பணியாளா்கள் தடையின்றி இருநாடுகளுக்கு பயணிக்கும் வகையில் புலம்பெயா்வு ஒப்பந்தம், கலாசார பரிமாற்றத் திட்டம் ஆகியவை கையெழுத்தானது.
இதனைத்தொடர்ந்து தலைநகர் ரோமில் இத்தாலி நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு ஆணையக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
அப்போது. இஸ்ரேல்-ஹமாஸ், மற்றும் ரஷியா-உக்ரைன் போரைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழலை இந்தியா அதிக கவலையுடன் கவனித்து வருவதாக தெரிவித்தார். அதன் விளைவாக உலகின் பல்வேறு பகுதிகளில் எரிசக்தி, உணவு, உரம், பணவீக்கப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் 4-ஆவது பெரிய வா்த்தக கூட்டாளியாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் உள்ள சுமாா் 750 நிறுவனங்கள், இந்தியாவில் சுமாா் ரூ.52,400 கோடி அந்நிய முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியம் மீது இத்தாலியும் ஐரோப்பிய யூனியனும் அதிக ஆா்வம் காட்டுவதை இந்தியா வரவேற்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.