விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தளவானூரில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் தளவானூரில், திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் இராஜ் பன்னீர் செல்வம் மற்றும் வெடால் விஜயன் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் தளவானூர் கிராமத்தில் பஞ்சபாண்டவர் மலையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் சில சிற்பங்கள் இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர். அங்கு வேப்பமரத்தின் அடியில் பலகை கல்லில் புடைப்பாக ஒரு சிற்பம் காணப்பட்டது. சுமார் 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ள அச்சிற்பம் தவ்வை என்று கண்டறியப்பட்டது. இது 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய தவ்வை சிற்பம் ஆகும்.
மேலும், கொற்றவை மற்றும் முருகன் சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வூரில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய குடவரை மற்றும் கல்வெட்டு உள்ளது. பல்லவர் காலத்திய சிற்ப அமைப்பு மற்றும் அணிகலன்களின் தாக்கம் இக்கொற்றவை சிற்பத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.
இக்கொற்றவை சிற்பத்தின் அருகே, சிறிய அளவில் தாமரை மீது நின்ற கோலத்தில் தனது ஒருகையில் தாமரை மொட்டையும், மற்றொரு கையில் வேலையும் ஏந்திய நிலையில், முருகன் சிற்பம் உள்ளது.