1988 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் ஒரு குழந்தை பிறந்தது. பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த அந்த குழந்தையின் குடும்பத்திற்கு தெரியாது, ஒரு நாள் நம் குழந்தை உலகம் போற்றும் கிங் ஆகா திகழும் என்று. ஆம் கிரிக்கெட்டின் கிங், விராட் கோலி பிறந்த தினம் இன்று.
இவரின் தந்தை பிரேம் கோலி, இவர் ஒரு குற்றவியல் வழக்கறிஞர். தாய் சரோஜ் கோலி இவர் இல்லத்தரசி. தன்னுடைய குழந்தை பருவம் முதலே கிரிக்கெட் மீது அதீத அன்பு கொண்டு விளையாட தொடங்கிவிட்டார்.
சிறிய வயதில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிக்கும் போது விராட் கோலியோ 1998 ஆம் ஆண்டு தன்னுடைய 10 வது வயதில் டெல்லியில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார்.
அகாடமியில் இருந்த ராஜ்குமார் ஷர்மாவின் வழிகாட்டுதலின் படி கிரிக்கெட் விளையாடிவந்த விராட் 2002 ஆம் ஆண்டு 15 வயதுக்கு உட்பட்டோருக்கான டெல்லி அணியில் விளையாடி அதிக ரன்களை குவித்தார்.
இப்படி மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த விராட்டிற்கு 2006 ஆம் ஆண்டு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு மாத காலமாக விராட்டின் தந்தை படுத்தப் படுகையாக இருந்த நிலையில் திடீரென இறைவனடி சேர்ந்தார்.
அவரின் மறைவுக்கு பின்னர் விராட்டின் குடும்பம் மிகவும் சிரமத்திற்கு உள்ளானது. அந்த சமயத்தில் அவருக்கு வந்த பல தடைகளை தகர்த்தெறிந்து 2006 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய அணியில் சேர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றார்.
அந்த சுற்றுபயணத் தொடரில் ஒரு நாள் போட்டியில் 105 ரன்களை எடுத்து வெற்றியுடன் நாடு திரும்பினார். பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அட்டகாசமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிரந்தர பேட்ஸ்மேன் ஆனார்.
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகமாகி நிறைய ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார்.
பின்னர் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 வயத்துக்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பைத் தொடரில் வெற்றி வாகையை சூடினார்.
பின்னர் இவர் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதனாலும், டிசம்பர் 18-ம் தேதி அவர் தந்தை இறந்ததால், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் தனது ஜெர்ஸி எண்ணைத் 18 ஆகா தேர்வு செய்துள்ளார்.
இவர் டெஸ்ட் போட்டியில் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஐபில் தொடரில் 2008 ஆம் பெங்களூர் அணிக்காக களமிறங்கிய இவர் இன்றளவும் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.
இவர் இதுவரை ஒரு நாள் கிரிக்கெட்டில் 288 போட்டிகளில் 48 சதங்களும், 70 அரைசதங்களும் அடித்து மொத்தமாக 13525 ரன்களை எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 111 போட்டிகளில் விளையாடி 29 சதங்களும் 29 அரைசதங்களும் அடித்து மொத்தமாக 8676 ரன்களை எடுத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 115 போட்டிகளில் விளையாடி 1 சதமும் 37 அரைசதங்களும் அடித்து மொத்தமாக 4008 ரன்களை எடுத்துள்ளார்.
ஐபில் தொடரில் 237 போட்டிகளில் விளையாடி 7 சதங்களும் 50 அரைசதங்களும் அடித்து மொத்தமாக 7263 ரன்களை எடுத்துள்ளார்.
இதுவரை மொத்தமாக 85 சதங்களை எடுத்து கிரிக்கெட் கிங் ஆகா திகழ்கிறார் விராட் கோலி. பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் கலக்கிய விராட் ஒரு நாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் மற்றும் ஐபில் என அனைத்திலும் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி மொத்தமாக 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இதுமட்டுமின்றி இதுவரை விராட் கோலி 416 கேட்ச் பிடித்துள்ளார் மேலும் 52 ரன் அவுட் செய்துள்ளார்.
இப்படி கிரிக்கெட்டை காதல் செய்த விராட் கோலியின் மனதில் கிரிக்கெட்டை தாண்டி காதல் செய்யும் அளவிற்கு ஒரு பெண் வந்தார். ஆம் அவர்தான் அனுஷ்கா சர்மா.
இருவரும் காதல் செய்து 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தை 2021 ஆம் நாடு ஜனவரி மாதம் 11 தேதி பிறந்தார்.
பல தடைகளை தாண்டி பிடித்தவரை இழந்து பிடித்ததை தேடி இன்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் கிங் விராட் கோலி அவர்களின் சாதனை பயணம் பல சரித்திரங்களையும் தாண்டி சங்கமமாய் நீடிக்க வாழ்த்துவோம்.