இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக கோவிலாங்குளம், மண்டலமாணிக்கம், அபிராமம் உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், கமுதி பஜார் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
எப்பொழுதும் இல்லாத அளவாக நேற்று முன்தினம் 123 மில்லி மீட்டர் மழை பதிவானது. வருவாய்த்துறை அதிகாரிகள் மழை சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கமுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. கமுதி கோட்டைமேடு கால்நடை மருத்துவமனை அருகே பழமையான வாகை மரம் முறிந்து விழுந்ததில், அங்கிருந்த டீக்கடை மற்றும் சுற்றுச்சுவர் முழுமையாக இடிந்தன.
மேலும், நான்கு பேரின், மண் சுவரினாலான ஓட்டு வீடுகளின் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. வட்டாட்சியர் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சேதமடைந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.