காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டிய நிலையில், ஆதாரத்தை காட்டுமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா கூறியிருக்கிறது.
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்துவாரா அருகே, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.
இதை இந்திய மறுத்த நிலையில், அந்நாட்டுக்கான இந்திய தூதரை கனடா அரசாங்கம் வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதரக உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்றியது. மேலும், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில்தான், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கில் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தைக் காட்டுமாறு கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து கனேடிய தளமான தி குளோப் அண்ட் மெயிலுக்கு கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா அளித்த பேட்டியில்,
“தீவிரவாதி கொலை வழக்கு விசாரணையில் உதவுவதற்கு ஏதுவாக இந்தியாவிடம் இதுவரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. ஆதாரம் எங்கே உள்ளது? விசாரணை முடிவு எங்கே? இந்த விவகாரத்தில் ஒரு படி மேலே சென்று விசாரணை கறைபடிந்து விட்டது என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கிறேன்.
இக்கொலை விவகாரத்தில் இந்தியா அல்லது இந்திய ஏஜென்ட்கள் உள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்குமாறு மேல் மட்டத்தில் இருந்து யாரோ அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். தூதர்களுக்கு இடையிலான எந்தவொரு உரையாடலும் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே, அவற்றை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது.
சட்டவிரோதமான ஒயர்டேப்கள் பற்றிப் பேசுகிறீர்கள். ஆதாரங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். இரண்டு இராஜதந்திரிகளுக்கு இடையிலான உரையாடல்கள் அனைத்து சர்வதேச சட்டங்களாலும் பாதுகாக்கப்பட்டவை. இந்த உரையாடல்களை நீங்கள் எவ்வாறு கைப்பற்றினீர்கள் என்பதை எனக்குக் கூறுங்கள்” என்று கூறியிருக்கிறார்.