காங்கிரஸ் கட்சி பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளட்ட 5 மாநிலங்களில் இம்மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. முதல்கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கும், மிசோராம் மாநிலத்துக்கும் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பா.ஜ.க. ஆட்சியில் மத்தியப் பிரதேச மாநிலம் முன்னேறி இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் நேர்மையற்ற காங்கிரஸ் கட்சி பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து, மக்களை ஏமாற்றி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. தற்போது காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்கள் தோல்வியடைந்து விட்டன.
எனினும், வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் காங்கிரஸ் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மொபைல் கிளினிக்குகள் மூலம் இலவச சிகிச்சை அளிப்போம் என்று காங்கிரஸ் கூறுகிறது. சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியே சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்குக் காரணம் என்ன?
அதேபோல, டெல்லி மாசுபாடு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பெரிய கனவுகளை காண்பித்தார். ஆனால், கடந்த 6 மாதங்களாக 3 புகைக் கோபுரங்கள் செயல்படவில்லை என்று நான் கூறுகிறேன். மேலும், பஞ்சாப் மாநில அரசு குப்பைகளை எரிப்பதால் மாசு ஏற்படுகிறது. தற்போது ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மர்றும் டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கிறது. இருவரும் சேர்ந்து டெல்லியை சுவாசிக்க முடியாத கேஸ் சேம்பராக்கி விட்டார்கள்.
மேலும், மத்தியப் பிரதேச மாநிலம் ஒரு காலத்தில் ‘பிமாரு ராஜ்ஜியமாக’ இருந்தது. ஆனால், கடந்த 15 முதல் 18 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் முன்னேறி இருக்கிறது. இதை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணியினர் விரும்புகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது” என்றார்.