தலைநகர் டெல்லியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு மின்சாரப் பேருந்து ஒன்று சாலையில் இருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி ரோகினி பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்து பேருந்து ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இந்த சொகுசு பேருந்து, சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ ரிக்ஷா ஆகிய வாகனங்கள் மீது மோதியது. தொடர்ச்சியாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது. அதைப் பார்த்த பொதுமக்கள், அங்கிருந்து சிதறி ஓடினர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.