தெலங்கானா முதல்வரை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் 119 சட்ட சபை தொகுதிகளுக்கு வரும் 30 -ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் நாளில் சுயேச்சை வேட்பாளரான சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் போட்டியிடும் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தனது மனுவைத் தாக்கல் செய்தார்.
நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் போட்டியிட இதுவரை 236 முறை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதுவரை, 5 முறை ஜனாதிபதி, 5 முறை துணை ஜனாதிபதி, 32 முறை மக்களவை, 72 முறை சட்டசபை, 3 முறை எம்எல்சி, 1 முறை மேயர், 3 முறை நகர்மன்றத் தலைவர் என்று பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதனால், இவரைத் தேர்தல் மன்னன் என்று அழைக்கின்றனர்.
தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை எதிர்த்து பத்மராஜன் போட்டியிட்டுள்ளார். தற்போது தெலங்கானா முதல்வரை எதிர்த்து முதல் முறையாக அவர் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.