சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் 5ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சி சாா்பில் களம் காணும் 83 போ் கொண்ட முதல் பட்டியலையும், அதனைத் தொடா்ந்து 41 போ் கொண்ட இரண்டாவது பட்டியலை பாரதீய ஜனதா வெளியிட்டுள்ளது.
நவ.2ஆம் தேதி 58 போ் கொண்ட மூன்றாவது பட்டியலையும், நவ.4ஆம் தேதி 2 பேர் மட்டுமே அடங்கிய 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.
இந்நிலையில் 15 பேர் கொண்ட ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
பட்டியலில் சில புதிய முகங்களும் உள்ளன, அதே நேரத்தில் ஒரு சிட்டிங் எம்எல்ஏவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மவ்லி (உதைபூர்) தொகுதியில் இருந்து தற்போதைய எம்.எல்.ஏ., தர்மநாராயண் ஜோஷிக்கு பதிலாக கே.ஜி.பாலிவாலை புதிய வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளது.
சிவில் லைன்ஸ் தொகுதியில் கோபால் சர்மா மற்றும் ஆதர்ஷ் நகரில் ரவி நய்யார் உட்பட பல புதிய முகங்கள் கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சரத்புரா தொகுதியில், மாநில முதல்வா் அசோக் கெலாட்டுக்கு எதிராக, ஜோத்பூா் வளா்ச்சி ஆணைய முன்னாள் தலைவா் மகேந்திர சிங் ரத்தோரை பாஜக களமிறக்கியுள்ளது. டோங்க் தொகுதியில் போட்டியிடும் மாநில முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட்டுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ அஜித் சிங் மேத்தா நிறுத்தப்பட்டுள்ளாா்.
ஐந்தாவது பட்டியலின் மூலம், மாநிலத்தில் உள்ள 200 இடங்களில் 198 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 6ம் தேதியும், வாக்குப்பதிவு நவம்பர் 25ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதியும் நடைபெறும்.