மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளது.
மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா தவிா்த்து, சீனா, நடப்பு சாம்பியன் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. கடுமையாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி வாகையை சூடியது.
இந்திய அணியின் சலிமா டெடெ 11 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து வைஷ்ணவி பால்கே 19 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
தென் கொரியா அணி எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை ஆகையால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும் ஜப்பான் அணி அரையிறுதியில் சீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று இறுதிப் போட்டியில் இந்தியா ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளது.