கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால், 6 ஆயிரத்து 169 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஜிகா காய்ச்சலும், டெங்குவை பரப்பும், ‘ஏடிஸ்’ கொசுவின் மூலமாகப் பரவும் வாய்ப்பு உள்ளது.
இதனால், தமிழக – கர்நாடக எல்லைகளில் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சிவப்பு தடிப்புகள் போன்ற அறிகுறிகள் இருந்தால், தன்னிச்சையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவர்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கர்ப்பிணியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், கருவிலிருக்கும் குழந்தைக்கு மூளை பாதிப்பு மற்றும் சிறிய தலையுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.