கன்னியாகுமரியில் இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வாரத்தின் கடைசி நாட்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில், குமரிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.
இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கன்னியாகுமரிக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குக் கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.
சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் படகில் சென்று பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்குப் படகு போக்குவரத்து நடக்கவில்லை.
மேலும், கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், இராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
பொதுமக்களின் பாதுகாப்புக்காகக் கடலோர பாதுகாப்புக் குழுமக் காவல்துறை, சுற்றுலாக் காவல்துறை மற்றும் உள்ளூர் காவல்துறை அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.