பாரதப் பிரதமர் மோடியும், தாமரை சின்னமும்தான் எங்களது முகம். மற்றபடி முதல்வராகத் தேர்வு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அவரது பதவிகாலம் முழுமையடைவதை உறுதி செய்வோம் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே, இம்மாநிலத்திற்கு இம்மாதம் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.
இதனால் இரு கட்சியினரும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 200 தொகுதிளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனினும், அசோக் கெலாட்டையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.
அதேசமயம், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை மாநிலத் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில்லை. எனவே, ராஜஸ்தானில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜ.க. அறிவிக்கவில்லை. எனினும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா இம்முறை முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டார் என்று பரவலான பேச்சு நிலவி வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பிரதமர் மோடி மற்றும் தாமரைதான் எங்களின் முகம். மேலும், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இடம் பிடித்திருப்பவர்கள் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வார்கள். முதல்வராகத் தேர்வு செய்யப்படும் நபர் யாராக இருந்தாலும், அவருடைய பதவிக்காலம் முழுமை அடைவதை உறுதி செய்வோம்.
மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த முறை தேர்தல் நடக்கும். காங்கிரஸ் கட்சியின் ஊழல்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். ஊழலுக்கு எதிரான போரில் பாடுபடும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட ஏஜென்ஸிகளை பாராட்ட வேண்டும். ஊழல் செய்பவர்கள் பிடிபட்ட பிறகு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்” என்றார்.