ஜம்மு காஷ்மீரில் ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை அம்மாநிலக் காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் நடைமுறையை கையாண்டிருப்பது ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடி வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக, மாநில காவல்துறையுடன் இராணுவமும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஏராளமான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேசமயம், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி அத்துமீறும் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க, ஜாமீனில் வெளிவரும் தீவிரவாதிகள், காவல்நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விடுகின்றனர்.
ஆகவே, தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். இந்தியாவிலேயே இப்படியொரு நடவடிக்கையை எடுக்கும் முதல் காவல்துறை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நடைமுறை ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இருக்கிறது. இந்நாடுகளில் ஜாமீன், பரோல் அல்லது வீட்டுக்காவலில் உள்ளவர்களை கண்காணிக்க அவர்களது உடலில் ஜி.பி.எஸ். டிராக்கர் கருவிகள் பொருத்தப்படுகின்றன.
இதன் மூலம், ஜாமீனில் வருபவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடிவதுடன், அவர்களை கண்காணிக்கவும் முடியும். இதனால், அவர்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கூறுகையில், “என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் தீவிரவாதிகளுக்கு ஜி.பி.எஸ். டிராக்கர் கருவி பொருத்தப்படுகிறது” என்றார்.
தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி குலாம் முகமது பட், ஜாமீன் கோரி ஜம்முவிலுள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீவிரவாதி செய்த குற்றத்தின் தீவிரவாதியை எடுத்துரைத்தவர், அவரை கண்காணிக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.
இதையடுத்து, அத்தீவிரவாதிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும்கூட, அவரைத் தொடர்ந்து கண்காணிக்க ஜி.பி.எஸ். டிராக்கர் கருவியை பொருத்த உத்தரவிட்டது. அதன்படி, குலாம் முகமது பட்டின் கணுக்காலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது.