கேரளாவில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் ஒரே கட்டடத்தில் 3 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் என பலருக்கும் காய்ச்சல், தலைவலி, கண்வலி, மூட்டுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த 30-ஆம் தேதி ஜிகா வைரஸ் முதல் தொற்று பதிவானது.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் மற்றும் உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு ஆலப்புழா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், மேலும் 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலச்சேரி நீதிமன்ற வளாகத்தில் கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கண்ணூர் மாவட்டத்தில் எட்டு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஜிகா வைரஸ் தொற்று கர்ப்பிணிப் பெண்களைக் கடுமையாக பாதிக்கிறது. இது கருவில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.