சட்ட விரோத பணபரிமாற்றற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவரது வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரின் நீதிமன்ற காவலை நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.