சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கவிருக்கும் நிலையில், நக்சல்கள் வைத்த ஐ.இ.டி. குண்டு வெடித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், 2 வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர் ஆகிய 4 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக, நக்சல்களின் நடமாட்டமுள்ள பதற்றமான 20 வாக்குச்சாவடிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி ஊழியர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களோடு தங்களது வாக்குச்சாவடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், கான்கேர் மாவட்டத்தின் 4 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த குழுவினர் இன்று சென்றனர். மர்பேடா முகாமில் இருந்து ரெங்ககதி ரெங்ககொண்டி வாக்குச்சாவடிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சோடேபெட்டியா காவல் நிலையப் பகுதியில் சென்றபோது, மேம்படுத்தப்பட்ட வெடிபொருளான ஐ.இ.டி. வெடித்தது.
இச்சம்பவத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மற்றும் வாக்குச்சாவடி ஊழியர்கள் 2 பேர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனிடையே, நாராயண்பூர் மாவட்டம் முர்ஹாபதர் கிராமத்தில் நக்சல்கள் வைத்திருந்த ஐ.இ.டி. வெடிகுண்டை இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, அக்குண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அக்குண்டு திடீரென வெடித்ததில் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அப்பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.