தீபாவளியை பண்டிகையை கொண்டாடும் வகையில் நவம்பர் 13ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
தீபாவளிக்கு அடுத்த நாள் வேலை நாள் என்பதால், சொந்த ஊர் சென்றவர்கள் அன்று இரவே திரும்ப வேண்டிய சூழ்நிலை இருந்தது.
மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குடும்பத்துடன் கூடுதலாக ஒரு நாள் செலவிடுவதற்காக திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.