ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 இலக்குகளை அழித்ததாகவும், ஹமாஸ் இராணுவ வளாகத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதலை தொடுத்தனர். இதில், 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது அசுரத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் மற்றும் தீவிரவாதிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் உட்பட 2,500 இலக்குகளை அழித்தது.
இந்த நிலையில்தான், ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 இலக்குகளை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவப் படைகளின் செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காஸா முனைப் பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம்.
மேலும், காஸா நகரை வடக்கு காஸா மற்றும் தெற்கு காஸா என இரண்டாக பிரித்து விட்டோம். வடக்கு காஸா மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளோம். அதேபோல, கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம். தீவிரவாத அமைப்பினருக்குச் சொந்தமான பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள், மேலே உள்ள தளங்கள், தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல் தொடர்கிறது.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதி, சுரங்கப்பாதைகள், தீவிரவாத நிலைகள், இராணுவ வசதிகள், கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் தொட்டி எதிர்ப்பு ஏவுகணை ஏவுதளங்கள் உள்ளிட்ட மேலும் 450 ஹமாஸ் இலக்குகளை அழித்திருக்கிறோம். மேலும், காஸாவில் உள்ள ஹமாஸ் இராணுவ வளாகத்தையும் கைப்பற்றி இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.