மிசோராம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்களிக்க முடியாமல் திரும்பிச்சென்றார்.
மிசோராம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல்., பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இன்று காலை ஐசால் வடக்கு-2 தொகுதியில் உள்ள ஒய்.எம்.எம். ஹால் வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
அதிகாரிகள் கோளாறை சரி செய்ய முயன்றும் முடியவில்லை. இதனால் முதலமைச்சர் சிறிது நேரம் அங்கு காத்திருந்தார்.
ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தை சரி செய்ய முடியாததால் முதலமைச்சர் ஜோரம்தங்கா அங்கிருந்து கிளம்பி சென்றார். சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வாக்குச்சாவடிக்கு சென்ற முதலமைச்சர் வாக்களித்தார்.