ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான அழகர் கோவிலுக்கு சோலைமலை என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தர ராஜ பெருமாளுக்குத் தைலக்காப்பு நடைபெறும். இது தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரையிலான 6 மாத காலத்துக்கு நடைபெறும். இந்த தைலப்பிரதிஷ்டை நடக்கும் காலங்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட முடியும்.
மேலும், இங்குள்ள யோக நரசிம்மர் உக்கிர ரூபத்தில் உள்ளதால், நரசிம்மரின் உக்கிரத்தைத் தனிக்கத் தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவற்றால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
தமிழர்களின் சிற்பக் கலைக்குச் சான்றாக இந்த கோவிலில் அழகிய சிற்பங்களுடன் ஜொலித்து வருகிறது. திருக்கோவிலின் காவல் தெய்வமாகப் பதினெட்டாம்படி கருப்பசாமி அமைந்துள்ளார்.
மதுரையின் அடையாளமான சித்திரைத் திருவிழாவின்போது அழகர் வைகை ஆற்றில் இறங்குவார். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அழகர் திருக்கோவிலில் வரும் 23-ம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அழகர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, மதுரை மாநகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.