தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே சிறப்பு வந்தே பாரத் இரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே வியாழக் கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு வாரத்தின் 7 நாட்களும் வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளதாகத் தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக இரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி பண்டிகையின் போது, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் சிறப்பு இரயில்கள் வியாழக்கிழமை இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் (இரயில் எண் – 06067) சிறப்பு இரயில் நவம்பர் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து காலை 06.00 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் மதியம் 2.15 மணிக்குத் திருநெல்வேலியைச் சென்றடையும்.
மறுமுனையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கிச் செல்லும் வந்தே பாரத் சிறப்பு இரயில் (இரயில் எண் – 06068) திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 9-ஆம் தேதி (வியாழன்) மதியம் 3.00 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் எனக் கூறப்பட்டுள்ளது.