மத்திய பிரதேசத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைகிறது. இதனையடுத்து நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கி விட்டது.
மத்திய பிரதேசத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறரை லட்சம். அவர்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். மாற்றுத்திறனாளிகள் (திவ்யாங்க)வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சம் .
சுமார் 1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் வாக்காளர்கள் மற்றும் (திவ்யாங்க மக்கள்) வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியைப் பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் குழுக்கள் வீடு வீடாகச் சென்று வாக்குப்பதிவு நடத்தி வருகின்றன. 75 ஆயிரம் சேவை வாக்காளர்களுடன், நான்கரை லட்சம் ஊழியர்களும் தேர்தல் பணியில் உள்ளனர்.