தரையிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.), நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்காக ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ரேடார்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. அந்த வகையில் ‘பிரளய்’ என்ற ஏவுகணையைத் தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணை, தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கைத் தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் இரக ஏவுகணை ஆகும். இது ‘பிரித்வி’ ஏவுகணையை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திட எரிபொருள் ஏவுகணை ஆகும்.
இந்த ஏவுகணை 350 கிலோ மீட்டர் முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள, எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை உள்ள ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கவல்லது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோர் கடலோரத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் ‘பிரளய்’ ஏவுகணை சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை அதன் இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது. ஏவுகணை சென்ற பாதையைச் சாதனங்கள் துல்லியமாகக் கண்காணித்தன. திட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் ஏவுகணை பூர்த்தி செய்துள்ளது.
வரும் காலங்களில் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் அருகே பாதுகாப்பிற்காக இந்த ஏவுகணைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்தியாவின் பிரளய் ஏவுகணை, சீன இராணுவத்தின் வசம் இருக்கும், ‘டாங் பெங் 12’ மற்றும் தற்போது உக்ரைன் போரில் இரஷ்யா பயன்படுத்தி வரும், ‘ஸ்கான்டர்’ ஏவுகணை ஆகியவற்றுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.