ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடு எனப் போற்றப்படுவது திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில். இங்கு முருகப் பெருமான், சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மதுரை அடுத்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பரங்குன்றத்தில்தான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இதனால், இந்த கோவிலில் முருகன் மணக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
சுமார் 190 மீட்டர் உயரத்தில் காட்சி தரும் இந்த குன்றானது, சிவலிங்க வடிவில் காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாகப் பக்தர்களால் வணப்படுகிறது.
இந்த மலையை ஒரு முறை வலம் வந்து வழிபட்டாலே, வினைகள் விலகி ஓடிவிடு என்று திருஞான சம்பந்தரே தேவாரத்தில் பாடியுள்ளார். சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் பதிகங்கள் பல பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர், முருகனை வணங்கி தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம் இதுவாகும்.
இப்படி, சிறப்புகள் வாய்ந்த திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா, 13 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை நடைபெறுகிறது. 17 -ம் தேதி கோவர்த்தன அம்பிகையிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யச் சக்தி வேல் வாங்கும் நிகழ்வும், 18 -ம் தேதி சூரபத்மனை அழிக்கும் சூரசம்ஹாரம் நடைபெறும். 19 -ம் தேதி சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.