முருகனின் இரண்டாம் படைவீடு எனப் போற்றப்படுவது திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். ஓம் என்ற பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து முறையில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சன்னதியில் மேற்கு திசையில் இராஜகோபுரம் அமைந்துள்ளது. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை. செந்தில் ஆண்டவர் ஒரு முகம், 4 திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.
இறைவன் சூரியன் – சந்திரன் எனப் பஞ்ச பூதங்களாக விளங்குகிறார் என்பதை விளக்கும் வகையில்,
கருவறையின் பின்பு 5 லிங்கங்களும், கருவறைக்குள் 3 லிங்கங்களும் உள்ளன. இந்த அஷ்ட லிங்கங்களை மார்கழியில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம்.
இங்கு உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடை பெறுகிறது. செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்குப் பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில், கந்த சஷ்டி விழா 13 -ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 18 -ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
விரதம் மேற்கொண்ட பக்தர்கள் விரதம் முடித்து கடலில் நீராடிவிட்டு, பின்னர் உணவு சாப்பிடுவார்கள்.