முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 -வது படை வீடாகப் போற்றப்படுவது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். இங்கு கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். தினமும் இரவு இவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது.
கருவறையில் பழனியாண்டவர் அருகில் உள்ள ஒரு சிறிய பேழையில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் உள்ளதாகவும், இவர்களைப் பழநி ஆண்டவரே பூஜிப்பதாக ஐதிகம்.
மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போகச் சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லாவித நோய்களையும் குணப்படுத்தும் என்பது ஐதீகம், .
இங்கு இடும்பனுக்குப் பூஜை செய்த பிறகே தண்டபாணிக்கு பூஜை நடைபெறுகிறது. முருகனின் கையில் தண்டத்தில் உள்ள கிளி அருணகிரியாரின் வடிவமாகப் போற்றப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில், கந்த சஷ்டி விழா வரும் 13 -ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18 -ம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, பின்னர் விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளா பூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1.30 மணிக்குச் சாயரட்சை பூஜை நடைபெறும். இந்த விழாவில் திரளான முருக பக்தர்கள் கலந்து கொள்வர்.