பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பெண்கள் தொடர்பான பேச்சு இந்தியாவை தலைகுணிய வைக்கும் வகையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதாம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்று பேசினார். அப்போது, படித்த பெண்கள் திருமணம் செய்து கொண்டால் கணவருடன் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் என்றும், பெண்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
பீகாரில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.9 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இண்டி கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் சட்டப்பேரவையில் பெண்கள் குறித்து அநாகரிகமான வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதற்கு அந்த கூட்டணி தலைவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெண்கள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்பவர்கள், ஏதாவது உங்களுக்கு நல்லது செய்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
அவர்கள் என்றைக்காவது பெண்களை மதித்திருக்கிறார்களா? உலகத்தின் முன் இந்தியாவைத் தலைகுனிய வைப்பது போல் நிதிஷ் குமாரின் பேச்சு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதேபோல் நிதிஷ்குமாரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகார் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைய தலைவி அம்மாநில சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பொறுப்பான பதவியில் இருப்பவர் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. நிதிஷ் குமார் பேசிய பேச்சை சட்டசபை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.