2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனி கோளின் வளையங்கள் நம் கண்களுக்குத் தெரியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டுக் கோள்கள் உள்ளன. இவற்றில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை சிறிய கோள்களாகவும், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை பெரிய கோள்களாகவும் உள்ளன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து அமைந்துள்ள இரண்டாவது பெரிய கோளாக சனிக்கோள் உள்ளது. மேலும், சனி கோளைச் சுற்றி வளையங்கள் உள்ளன.
இந்த நிலையில், வளையங்களுக்குப் பெயர் பெற்ற மாபெரும் கிரகமான சனி, விரைவில் தனது மகுடத்தை இழக்க உள்ளது. இதுகுறித்து நாசா கூறியதாவது, வளையங்கள் விரைவில் மறைந்துவிடும். சனியின் வளையங்கள் அதன் சுற்றுப்பாதையின் அச்சுக்குள் சாய்வதால் பூமியின் பார்வையில் இருந்து மறைந்துவிடும். சனி கிரகம் சூரியனைச் சுற்றி சுமார் 30 வருடங்கள் பயணம் செய்கிறது. இந்தப் பயணம் முழுவதும், கிரகத்தின் சாய்வின் அடிப்படையில், அதன் வளையங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரியும் என்று தெரிவித்துள்ளது.
இந்த காட்சி மாயை 18 மாதங்களில், அதாவது 2025-ஆம் ஆண்டு நிகழவுள்ளது. அப்போது, சனியின் வளையம் நம் கண்களுக்குத் தெரியாது. தற்போது சனி பூமியுடன் 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதனால் நமக்கு இப்போது அந்த வளையம் தெரிகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்த கோணம் சுமார் 3.7 டிகிரியாகக் குறையும்.
இறுதியாக, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனியின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலையைப் பெறும். அதாவது பூமியும் சனியும் ஒரே கோணத்தில் இருக்கும். இந்த நிகழ்வு 2032-ஆம் ஆண்டு வரை நீடிக்கும். பின்னர் வளையங்களின் அடிப்பகுதி நமது கண்களுக்கு வெளிப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
சனிக்கு ஏழு தனித்துவமான வளையங்கள் உள்ளன. அவை பனி, பாறை மற்றும் தூசி ஆகியவற்றால் ஆனது. நாசாவின் கூற்றுப்படி, இவை வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் சந்திரன்களின் எச்சங்கள் என்று நம்பப்படுகிறது. இந்த வளையங்கள் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை நீண்டுள்ளன. இது 30 பூமிகளின் அகலத்திற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.