தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நவம்பர் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் செயற்கை மழை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாகக் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலை, வானங்களிலிருந்து வெளியேறும் புகை, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு உள்ளிட்டவை காரணமாக உள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், நவம்பர் மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தில் டெல்லியில் செயற்கை மழை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நவம்பர் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் கூறியதாவது, செயற்கை மழை குறித்த ஆராய்ச்சி இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை. தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் சில முயற்சிகள் நடந்துள்ளன.
உலகளவில், செயற்கை மழை பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. செயற்கை மழை பொழிய வைப்பதற்கு ஈரப்பதம் மற்றும் மேகங்கள் வேண்டும். இவை இருந்தால், மட்டுமே செயற்கை மழை வரும் என்று கூறினார். செயற்கை மழை வரவழைப்பதற்கு, மேகங்கள் மீது சில இரசாயனப் பொருட்களைப் போடுவார்கள். இது மேகத்தின் அடர்த்தியை அதிகரித்து மழையைப் பொழிய வைக்கும்.
இதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் செயற்கை மழை வரவழைக்கப்பட்டது. இதன் காரணமாக, காற்று மாசுபாடு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்தது.