தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, செயற்கை மழை வரவழைப்பதற்கான திட்டத்தை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.
செயற்கை மழைக்காக கான்பூர் ஐஐடி நிபுணர்கள் அளித்த திட்டப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது டெல்லியின் காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் மற்றும் டெல்லி அமைச்சர்கள் இடையேயான சந்திப்புக்குப் பிறகு, செயற்கை மழை திட்டத்தைச் செயல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்று மாசுபாடு காரணமாகக் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், காற்று மாசுபாடு இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்தநிலையில், டெல்லியில் செயற்கை மழை மூலம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயற்கை மழை பெய்விக்கும் முறையை மேக விதைப்பு என்று அழைக்கிறோம். செயற்கை மழைக்கு விமானங்களின் உதவியுடன் மேகங்களின் மீது சில இரசாயன துகள்கள் தூவப்படுகிறது.
இது மேகத்தின் அடர்த்தியை அதிகரித்து மழையைப் பொழிய வைக்கும். இதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறிப்பிட்ட அளவு குறைக்க முடியும். இந்த திட்டத்திற்கு ஐஐடி கான்பூரின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் தலைமை தாங்குகிறார்.
செயற்கை மழை வரவழைப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் பல நாடுகளில் செயற்கை மழை வெற்றிகரமாக வரவழைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் வெற்றிகரமாகச் செயற்கை மழையை வரவழைத்துள்ளது.
காற்று மாசுபாட்டைக் குறைக்கச் செயற்கை மழை நிரந்தர தீர்வாக இல்லாவிட்டாலும், காற்று மாசுபாட்டை உடனடியாக குறைக்க ஒரு குறுகிய கால நடவடிக்கையாக இருக்கும்.