நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலை. பஞ்ச பூத்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்ற திருத்தலமாகவும் சிறப்பு பெற்ற திருக்கோவிலாகும்.
இங்குள்ள அண்ணாமலையார் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும், 100 -க்கும் மேற்பட்ட சந்நிதிகளும் உள்ளன.
இறை உருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் என 25 ஏக்கரில் மிகப் பிரமாண்டமாய் அமைந்துள்ளது. கிழக்கு ராஜகோபுரம் மட்டும் 217 அடி உயரம் கொண்டது. தமிழ்நாட்டில் இது 2-வது உயரமான கோபுரம் எனப் போற்றப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருவண்ணாமலை திருக்கோவிலின் முன்பு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கிழக்கு கோபுரம் எதிரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ஒரு பகுதியில், ரூ. 6 கோடி செலவில் வணிக ரீதியிலான கடைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி கோவில் வருமானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலின் முன்பு, ஆகமவிதிகளை மீறியும், பாம்ரபரியத்தை கண்டு கொள்ளாமலும், கோவில் நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு, எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.