அக்டோபர் மாதத்தில் ஆர்.பி.எஃப் ‘நன்ஹே ஃபரிஸ்தே’ நடவடிக்கையின் கீழ் 601 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளது
இரயில்வே சொத்துக்கள், பயணிகள் பயன்படுத்தும் பகுதிகள் மற்றும் பயணிகளின் நலனைப் பாதுகாப்பதில் இரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) உறுதியாக உள்ளது.
பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பந்தோபஸ்தான பயண அனுபவத்தை வழங்குவதற்காக இந்தப் படை 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது.
அக்டோபர் 2023-ல், ஆர்.பி.எஃப், பயணிகளின் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் வசதிகளைத் தொடர்ந்து உறுதி செய்தது. அதே நேரத்தில் இந்திய இரயில்வே அதன் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் உதவி வருகிறது.
ஆபரேஷன் “நன்ஹே ஃபரிஸ்தே” – தொலைந்து போன குழந்தைகளை மீட்பது: “நன்ஹே ஃபரிஸ்தே” திட்டத்தின் கீழ், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 601-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பதில் ஆர்.பி.எஃப் முக்கியப் பங்கு வகித்தது. இந்தக் குழந்தைகள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்ய ஆர்.பி.எஃப் அயராது உழைத்தது.
ஆட்கடத்தல் எதிர்ப்பு முயற்சிகள் (ஆபரேஷன் ஏஏஎச்டி): இந்திய இரயில்வேயின் பல்வேறு பதவிகளில் உள்ள ஆர்.பி.எஃப் மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவுகள் (ஏ.எச்.டி.யூ) மனிதக் கடத்தல்காரர்களின், தீய திட்டங்களை முறியடிக்க அயராது உழைத்தது. 2023 அக்டோபரில், கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து 39 பேரை ஆர்.பி.எஃப் மீட்டது.
ஆபரேஷன் “ஜீவன் ரக்ஷா” – உயிர்களைக் காப்பாற்றுதல்: ஆர்.பி.எஃப்-ன் கண்காணிப்பு மற்றும் விரைவான நடவடிக்கை காரணமாக, 2023 அக்டோபர் மாதத்தில் ரயில்கள், நடைமேடைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் ஆபத்தில் சிக்கிய 262 பயணிகளின் உயிரை ‘ஜீவன் ரக்ஷா’ நடவடிக்கையின் கீழ் காப்பாற்றியுள்ளனர்.
பெண் பயணிகளுக்கு அதிகாரமளித்தல் – “மேரி சஹேலி” முன்முயற்சி: பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “மேரி சஹேலி” முயற்சியைத் தொடங்கியுள்ளது. அக்டோபர் 2023-இல், 232 “மேரி சஹேலி” குழுக்கள் 13,664 ரயில்களில் 423,803 பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அளித்தன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 5,722 பேர் மீது ஆர்பிஎஃப் நடவடிக்கை எடுத்தது.
இடைத்தரகர்களுக்கு எதிரான நடவடிக்கை: இடைத்தரகர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆர்.பி.எஃப் 2023 அக்டோபரில் 490 பேரைக் கைது செய்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தது. மேலும், 42 சட்டவிரோத மென்பொருட்கள் உட்பட 43.96 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆபரேஷன் “நார்கோஸ்” – போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை: 2023 அக்டோபரில் 99 பேரைக் கைது செய்த ஆர்பிஎஃப், ரூ.5.99 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த குற்றவாளிகள் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரமளிக்கப்பட்ட துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.