நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா மீதான விசாரணை அறிக்கை மக்களவை தலைவரிடம் நாளை அளிக்கப்படும் என நெறிமுறைகள் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹூவா மொய்த்ரா.இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றார் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து அவர் கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், பாதியிலேயே வெளியேறினர்.
இந்நிலையில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் அக்குழுவின் தலைவர் வினோத் சோன்கார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இன்றைய கூட்டத்தின் போது விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கைக்கு 6 உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததாகவும், 4 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார். மக்களவை சபாநாயகரிடம் நாளை விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், நடவடிக்கை எதுவாக இருந்தாலும் சபாநாயகர் முடிவு செய்வார் என அவர் குறிப்பிட்டார்.