ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே யானை தந்தங்களைக் கடத்திய 3 பேரை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். 21.63 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சர்வதேச எல்லைகளைத் தாண்டி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. தங்கம், போதைப் பொருட்கள், கள்ள நோட்டுகள், பழம்பொருட்கள், துப்பாக்கிகள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கடத்துவதைத் தடுத்து இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பவர்களாக உள்ளனர்.
2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 பிரிவு 50-இல் திருத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவிற்குள் சட்டவிரோத விற்பனை செய்யப்படும் வனவிலங்கு பொருட்களைப் பறிமுதல் செய்வதற்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சிலர் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான 3 பேரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களுடைய பையில் 21.63 கிலோ எடையுள்ள இரண்டு யானைத் தந்தங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதை அடுத்து யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று பேரையும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த யானைத் தந்தங்களை இவர்களிடம் கொடுத்த மர்ம கும்பலைப் பிடிப்பதற்காகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஜூன் மாதம் சென்னை புறநகரில் சாலையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ எடையுடைய யானை தந்தத்தைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக ஏழு பேரைக் கைது செய்து மாநில வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கடந்த சில ஆண்டுகளில், 29 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 90 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.