சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூரில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
குறிப்பாக, சந்திரயான் நிலவுக்குச் செல்லும் போது, அது தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி’ என்று பெயர் சூட்டப்பட்டது எனப் பிரதமர் மோடியின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
அத்துடன், இரட்டை இயந்திர அரசை மத்தியிலும், சத்தீஸ்கரிலும் அமைக்க வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ‘மகாதேவ்’ என்ற பெயரில் சூதாட்டத்தில் ஈடுபட்டது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் பரவலாக மத மாற்றம் நடைபெற்றது என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் சத்தீஸ்கரில் ஊழல் ஆட்சி நிலவியது என்றும் குற்றம் சாட்டினார்.