முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகப் போற்றப்படுவது சுவாமிமலை முருகன் திருக்கோவில். இங்கு, முருகப் பெருமான் சுவாமிநாதனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும் இந்த சுவாமிமலை.
இங்கு முருகப் பெருமான் அலங்காரச் சிறப்புடையவர். காரணம், முருகப் பெருமானுக்கு விபூதி அபிஷேகம் செய்யும்போது, பழுத்த ஞானியாகக் காட்சி தருவார். அதே வேளையில், முருகப் பெருமானுக்குச் சந்தன அபிஷேகம் செய்யப்பட்டால், பாலசுப்ரமணியனாகக் காட்சி தருவார்.
இவை எல்லாவற்றையும்விட, கருவறையைக் கூர்ந்து கவனித்தால் சுவாமி நாதசுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன் மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தரும். இதிலிருந்தே சிவனும் முருகனும் வேறு வேறு அல்ல என்பது தெரியவரும்.
மூலவருக்கு எதிரில் இங்கு மயிலுக்குப் பதிலாக யானை உள்ளது. இந்திரன் சுவாமிநாத பெருமானை வணங்கி ஹரிகேஷன் என்ற அரக்கனை வென்றதால், தன் காணிக்கையாக இந்த யானையைக் கொடுத்ததாகப் புராணத்தில் கூறப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சுவாமிமலையில், கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக, திருக்கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழாவும், திருக்கார்த்திகை திருவிழாவும் ஒன்றாக வருகிறது. அதாவது, கந்த சஷ்டி விழா 12-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதுபோல, திருக்கார்த்திகை விழா 17-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார். கந்த சஷ்டி விழாவின் போது சிறப்புப் பூஜைகளும், விழாவின் நிறைவு நாளில் சூரசம்ஹாரமும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.