தமிழ் கடவுளான முருகனின் ஐந்தாம்படை வீடு எனப் போற்றப்படுவது திருத்தணி ஆகும்.
முருகப்பெருமான் வள்ளியைத் திருமணம் செய்த தலம் இது என்பதால், முருகர், வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
மற்ற முருகர் திருக்கோவில்களில் உள்ளது போல் இங்குள்ள முருகருக்கு வேல் கிடையாது. மூலவர் சன்னதி மேலே உள்ள விமானம் 6 தளங்களைக் கொண்டது. ஆறுபடை வீடுகளில் இங்குதான் உயரமான கருவறை கோபுரமும் உள்ளது.
வருடத்தின் நாட்களைக் குறிக்கும் வகையில் 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திருக்கோவிலில் கொடுக்கப்படும் சந்தனத்தை நீரில் கரைத்துக் குடித்தால் தீராத நோய்களும் நீங்குவதாக ஐதீகம். சுவாமிமலை போலவே இங்கும் முருகனுக்கு யானைதான் வாகனம். அத்துடன், இங்குள்ள பைரவர் 4 நாய்களுடன் காட்சி தருவது சிறப்பு.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருத்தணியில், கந்த சஷ்டி விழா 14-ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் அதிகாலை சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெறும். 14-ம் தேதி தங்க கவசமும், 15-ம் தேதி திருவாபரணமும், 15-ம் தேதி வெள்ளிக்கவசமும், 17-ம் தேதி சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
இங்கு முருகன் சூரனை வதம் செய்த பிறகு கோபம் தணிந்து அமர்ந்ததால் சூரசம்ஹாரம் இங்கு நடைபெறுவது இல்லை. மாறாக அன்று முருகனைக் குளிர்விப்பதற்காகப் புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது.