இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு செயலர்களை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், எஸ். ஜெய்சங்கர் சந்தித்து பேசினர்.
அரசு முறை பயணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலளர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி ஜே. பிளிங்கன் டெல்லி வந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
இந்நிலையில், அமெரிக்க செயலர்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது, இருதரப்பு உறவு, பாதுகாப்பு, ரஷ்யா உக்ரைன் போர். இஸ்ரேல் ஹமாஸ் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவும் அமெரிக்காவும் முன்னெப்போதையும் விட நெருக்கமாக இருக்கும் நேரத்தில் உங்கள் இந்தியப் பயணம் உள்ளது.
பல்வேறு வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும், முக்கியமான மற்றும் நீண்ட காலப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் கூட்டாண்மை சுதந்திரமான, திறந்த மற்றும் விதிகளுக்குட்பட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிசெய்வதில் முக்கியமானது என தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் பேசியதாவது :கடந்த ஆண்டில் முக்கிய பாதுகாப்புக் கூட்டாண்மையை கட்டியெழுப்புவதில் நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளோம், மேலும் இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான காரணத்திற்காக நாங்கள் மேலும் இணைந்து பணியாற்ற உதவும்.
எங்கள் ஒத்துழைப்பின் நோக்கம் பரந்தது, கடல் முதல் விண்வெளி வரை நீண்டுள்ளது.எங்கள் கூட்டாண்மையின் வலிமை மக்களிடையேயான உறவுகளில் வேரூன்றியுள்ளதாக தெரிவித்தார்.