வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் கனமழை வரை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலமான கோவையில், மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் மழைநீர் வடிகால் வழிந்து சாலையில் மழைநீர் ஓடி வருகிறது. செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி, மழைநீர் வடிகாலில் நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. மேலும், செட்டி வீதி அசோக் நகர்ப் பகுதிகளில் வீடுகளிலும் நீர் புகுந்தது.
கோவையில் பெய்த கனமழை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய போது, இளைஞர்கள் சிலர் வலையை எடுத்து வந்து மீன் பிடித்தனர். இதில், ஏரியிலிருந்து தண்ணீரில் தப்பிய மீன்கள் சிக்கியது. அப்போது அந்த இளைஞர்கள் திரைப்படப் பாடல்களைப் பாடி மீன் பிடித்தனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.