பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட உள்ளதால் அங்கிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்போவதில்லை என இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாட்டிற்கு திரும்பக் கொண்டுவரும் செயல்முறையை அதிகரிக்கவும், நாட்டில் அடைக்கலம் பெறுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்கவும், ‘பாதுகாப்பான மாநிலங்கள்’ பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க இங்கிலாந்து அரசாங்கம் திட்டங்களை முன்மொழிந்துள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நவம்பர் 8ஆம் தேதி வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்தியாவும்,ஜார்ஜியாவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
நாட்டின் குடியேற்ற அமைப்பை வலுப்படுத்தவும், ஆதாரமற்ற பாதுகாப்புக் கோரிக்கைகளை முன்வைக்கும் நபர்களின் துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டின் கரையை அடையும் புலம்பெயர்ந்தோரின் “படகுகளை நிறுத்த” பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விடசிறிய படகுகளில் வரும் இந்தியர்கள் மற்றும் ஜார்ஜியர்களின் வருகை அதிகரித்துள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.