தமிழக பாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்புறம் இருந்த பாஜக கொடிக்கம்பத்தைக் கடந்த 21-ம் தேதி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிய போது, காவல்துறையினருக்கும் பாஜக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஜேசிபி வாகனத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறி, தமிழகபாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டிக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 55 அடி உயரக் கொடிக்கம்பம் வைத்தால் மக்கள் கண்ணுக்குத் தெரியவே தெரியாது என்றும், ஜேசிபி வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் என நீதிபதி காவல்துறைக்குக் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனத்தின் உரிமையாளருக்கு ரூபாய் 12,000 வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் வைக்க மாட்டோம் எனப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அண்ணாமலை நடைப் பயணத்தின்போது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, ஒரு வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி-க்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், அமர் பிரசாத் ரெட்டி சிறையிலிருந்து வெளியே வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.