அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அந்நாட்டு மக்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகிற 12-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல்வேறு கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அவருடைய இல்லம் வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில், 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலான மக்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். கமலா ஹாரிஸ் விருந்தினர்களுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
தொடர்ந்து விருந்தினர்களுடன் உரையாற்றிய அவர், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்க்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியை கொண்டாடுவது முக்கியம். இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக, இந்த தீபாவளி அமையட்டும்.
இஸ்ரேலுக்குத் தன்னைக் காத்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது.அந்த உரிமையை ஆதரிப்பதற்காக அதிபர் ஜோ பைடனும் நானும் பாடுபட்டு வருகிறோம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வதை நாம் ஆதரிக்கிறோம். காசாவில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை மீட்பது முக்கியமானதாகும். அங்குப் போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.