ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அசத்தல் வெற்றி பெற்றது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே அரையிறுதிக்கு இந்தியா முன்னேறிய நிலையில், புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய போராடி வருகின்றன.
இந்த நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஒமர்சாய் 107 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார்.
இதை அடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவின் வான் டெர் டசென் 95 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த தோல்வியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.